நீதியான தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்குவதாக உறுதி

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் சூழலை உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதி

by Staff Writer 18-06-2020 | 9:09 AM
Colombo (News 1st) COVID - 19 ஒழிப்பிற்காக அரசாங்கம் கடந்த சில மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ​தெரிவித்துள்ளார். இந்த அர்ப்பணிப்பு தேர்தலை இலக்காக கொண்டது அல்லவெனவும் ஆட்கொல்லி தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதே அதன் நோக்கம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்குவதாக ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுதியளித்துள்ளார். இந்த நிலைமை தொடர்பில் மக்கள் தௌிவடைந்திருப்பதன் மூலம் எவ்வித சுகாதார பிரச்சினையும் இன்றி தேர்தலை எதிர்கொள்ள முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலுக்கான முதற்கட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பணிகளுக்காக பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட ஏனைய தரப்பினரின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இதன்போது கூறியுள்ளார். தேர்தல் கடமையில் ஈடுபடும் அதிகாரிகள் கட்டாயமாக சமூகமளிப்பதை உறுதிப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடிய எண்ணிக்கை மற்றும் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும்பொது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்படுவதன் மூலம் தேர்தலை வெற்றிகரமாக நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள COVID - 19 ஒழிப்பிற்கான பரிந்துரைகளை வர்த்தமானியில் வௌியிட வேண்டியது அவசியம் என அவர் மேலும் கூறியுள்ளார்.