5000 ரூபா முறைகேடு: கணக்காய்வு ஆரம்பம்

5000 ரூபா கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் கணக்காய்வு ஆரம்பம்

by Staff Writer 17-06-2020 | 1:25 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5,000 ரூபா கொடுப்பனவு உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த கணக்காய்வு முன்னெடுக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C. விக்ரமரத்ன தெரிவித்தார். பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கீழ் பிராந்திய மட்டத்தில் கணக்காய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஊடகங்களின் வாயிலாக அறிக்கையிடப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கணக்காய்வு முன்னெடுக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா பரவலினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் சமுர்த்தி, முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் மற்றும் விவசாய ஓய்வூதிய பெறுநர்கள் உள்ளிட்ட பலருக்கும் அரசாங்கத்தினால் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.