ஹிருணிக்காவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

by Staff Writer 17-06-2020 | 2:01 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன அறிவித்தல் பிறப்பித்துள்ளார். தெமட்டகொடையில் விற்பனை நிலையமொன்றில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று மனிதாபிமானமற்ற விதத்தில் தாக்கிய சம்பவத்திற்கு உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளுக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான ஹிருணிக்கா பிரேமச்சந்திரவோ அவரது சட்டத்தரணியோ மன்றில் ஆஜராகவில்லை. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி தெமட்டகொடையில் அமில பிரியங்க அமரசிங்க எனும் இளைஞரை பலவந்தமாக கடத்திச் சென்றமை உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுகளில் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் அவரின் பிரத்தியேக பாதுகாவலர்கள் 8 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பாதுகாவலர்கள் வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொள்ளாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிராக வழக்கு விசாரணை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.