by Bella Dalima 17-06-2020 | 9:28 PM
Colombo (News 1st) இந்திய சீன எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, சர்வ கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (19) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள காணொளி மூலமான கலந்துரையாடலில் அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
மாநில முதல்வர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
முதல்வர்களுடனான கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், எல்லைப்பகுதியில் உயிரிழந்த இராணுவத்தினருக்கு 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்திய இராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்தியா அமைதியை விரும்புகின்ற போதிலும், தாக்குதல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமாயின் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன இராணுவத்தினரிடையே இடம்பெற்ற மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நான்கு இந்திய இராணுவத்தினர் கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு நாட்டு இராணுவ வீரர்களும் ஆணிகள் அடங்கிய கட்டை, மூங்கில் குச்சி, மட்டை போன்றவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, எல்லைக் காட்டுப்பாட்டு கோட்டைக் கடந்து சீனப் பகுதியில் இந்த மோதல் நடைபெற்றுள்ளதால், இதற்கு சீனா பொறுப்பல்ல என சீனா தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பிரச்சினையைத் தீர்க்க அரசு ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் இந்தியாவும் சீனாவும் நெருங்கிய பேச்சுவார்த்தையில் உள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு 2 கிலோமீட்டருக்கு அருகில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை வீசக்கூடாது என 1996 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.