ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் போது முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயார்: அனுரகுமார தெரிவிப்பு

by Staff Writer 17-06-2020 | 4:32 PM
Colombo (News 1st) ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் போது முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நியூஸ்ஃபெஸ்ட் நியூஸ்லைன் விசேட தொகுப்பில் இணைந்துகொண்டு, கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான போராட்டமும் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டமும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டமும் உள்ளதாக அனுரகுமார திசாநாயக்க கூறினார். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறான போராட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் பயன்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார். ஆகவே, நாட்டில் வென்றெடுக்க வேண்டியுள்ள விடயங்களுக்காக தேசிய ரீதியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். இதற்காக 'தேசிய மக்கள் சக்தி' என்ற அமைப்பை கட்டியெழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியினரும் இதற்கு முன்னரான காலப்பகுதியில் அரசியல் செயற்பாடுகளில் அவர்களோடு இணைந்து செயற்பட்டவர்களும் தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கின்றனர். சிறு குழுக்களாக அன்றி, தேசிய ரீதியில் போராட்டங்களை மேற்கொள்வதே தமது நோக்கம் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். இந்த போராட்டத்தில் முன்னிலை சோசலிசக் கட்சியினரும் இணையும் பட்சத்தில் அவர்களோடு இணைந்து செயற்பட மக்கள் விடுதலை முன்னணி தயாராகவுள்ளதாக அவர் கூறினார்.