2019 தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் பங்கேற்பு, பெறுபேறுகளின் மறு ஆய்வறிக்கைக்கு என்ன நடந்தது?

2019 தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் பங்கேற்பு, பெறுபேறுகளின் மறு ஆய்வறிக்கைக்கு என்ன நடந்தது?

2019 தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் பங்கேற்பு, பெறுபேறுகளின் மறு ஆய்வறிக்கைக்கு என்ன நடந்தது?

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2020 | 10:35 pm

Colombo (News 1st) தெற்காசிய விளையாட்டு விழாவின் போதும் அதற்குத் தயாராகும் சந்தர்ப்பத்திலும் பல்வேறு சிக்கல்களை வீர, வீராங்கனைகள் எதிர்நோக்கினர்.

சுகததாச ஹோட்டல் தொகுதியில் தங்கியிருந்த வீர, வீராங்கனைகள் சிலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதுடன் மேலும் சில தங்குமிடங்களைத் தேடி ஒவ்வொரு இடங்களுக்கும் அலைய வேண்டி ஏற்பட்டது.

தங்குமிட வசதிகளை பெற்றுக்கொடுக்கும் போது ஏற்பட்ட சிரமங்கள், விமானப் பயணச்சீட்டை ஒதுக்கும் போது முன்னுரிமை அளிக்க வேண்டியவர்களை அடையாளம் காணத்தவறியமை மற்றும் பணம் செலுத்தியும் சில வீர, வீராங்கனைகளுக்கான உத்தியோகப்பூர்வ சீருடை இதுவரை வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

வீர, வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு பதிலாக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக நால்வர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவின் மறு ஆய்வறிக்கையில், 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றுக்கிடையில் நிலவிய மோதலை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருந்தது.

அந்த அறிக்கையின் பிரகாரம், விளையாட்டுத்துறை சட்டத்திற்கு மாத்திரமன்றி விளையாட்டுத்துறையின் ஒழுக்க மதிப்பை பாதிக்கும் பல விடயங்களும் உள்ளன.

10 விளையாட்டுகள் தொடர்பாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 10 விளையாட்டுகளில் சிற்சில தவறுகளும் குறைபாடுகளும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. அது தொடர்பாக ஆராய்வதற்காக நாம் மூன்று குழுக்களை நியமித்துள்ளோம். ஒரு குழுவில் மூன்று பேர் அங்கம் வகிக்கின்றனர். இந்த விளையாட்டுகளில் தவறுகள் இடம்பெற்றுள்ளதா? அப்படியானால் அதற்கு யார் காரணம்? யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பவற்றை இந்த மூன்று குழுக்களும் ஆழமாக ஆராய்ந்து 19 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளன. குறிப்பாக அதிகாரிகளை அழைத்து அவர்களிடம் சாட்சி விசாரணைகளை நடத்தி, வேறு எழுத்து ஆவணங்களின் தகவல்களைப் பெற்று அவர்களின் பரிந்துரைகளையும் அவர்கள் ஆராயவுள்ளனர். அப்போது அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் தொடர்பாக அமைச்சரால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது

என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார செயலாளர் K.D.S. ருவன் சந்திர குறிப்பிட்டார்.

இதேவேளை, 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மறு ஆய்வறிக்கை குழுவின் தலைவர் கிரெகர கெமுனு டி சில்வா பின்வருமாறு தெரிவித்தார்.

பிரச்சினைகளை நாம் நேரடியாக சுட்டிக்காட்டியுள்ளோம். இது தொடர்பாகவே விசேட குழு நியமிக்கப்பட வேண்டும். சிறந்த நடுவரின் தலைமையில் மூவர் கொண்ட அல்லது ஐவர் கொண்ட குழுவை நியமித்து ஆராயுங்கள் என்றே நான் கூறுகின்றேன். இந்த அமைச்சு பல குழுக்களை நியமித்தும் அவற்றின் அறிக்கைகளைக் கண்டறிய முடியவில்லை. ஆனாலும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாததால் ஒலிம்பிக் குழுவிற்கும் அமைச்சிற்கும் இடையிலான இந்த கயிறிழுக்கும் செயற்பாடு எதிர்காலத்திலும் தொடரலாம். இந்த அதிகாரிகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து அவர்கள் திருந்தாவிட்டால், ஒழுக்க ரீதியாக செயற்படாவிட்டால், இந்த நிலைமையில் அமைச்சரும் செயலாளரும் எடுக்கும் இந்த முயற்சிகள் பலனற்றுப்போகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்