அதிகார பரவல் குறித்து பேசுவோம்: எம்.ஏ. சுமந்திரன்

by Bella Dalima 16-06-2020 | 8:48 PM
Colombo (News 1st) அரசியலமைப்பு திருத்தம், தேர்தல் மேடைகளில் தற்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிடின், பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியிருந்தார். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தற்போது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான இயலுமை தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ளது. தமிழ் மக்களுடைய அபிலாசைகள் பூரணமாக நிறைவேற்றப்படுகின்ற வரைபு ஒன்றை செய்ய முடியுமாக இருந்தால், அரசாங்கத்துடன் அது குறித்து பேசி, அதற்கான புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதற்கான ஆவணங்களைக் கொடுக்கத் தாம் தயாராக உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.
 யுத்த நாயகன் என்று சிங்கள மக்களின் நம்பிக்கையை பெற்றவர் என்ற வகையில், அவர் தங்களுக்கு தீங்கிழைக்கமாட்டார் என்று சிங்கள மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவரினால் அதனை செய்ய முடியும். ஆகையினால், அவர்களுடன் நாங்கள் பேசுவோம். இந்த நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஒரே நாடாக இருக்க வேண்டுமாக இருந்தால், நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்று முழுமையாக நம்பி விசுவாசத்தோடு வாழ வேண்டும். அதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விதத்தில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். ஆகவே, அது குறித்து நாங்கள் பேசுவோம்
என எம்.ஏ. சுமந்திரன் மேலும் கூறினார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி, அரசியலமைப்பை மாற்ற முடியும் என பெத்திகட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
''எந்வொரு கட்சியாலும் மூன்றில் இரண்டை பெற முடியாதவாறே இந்த தேர்தல் முறை தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே, ஜே.ஆர்.ஜயவர்தன இந்த தேர்தல் முறைமையையும் அரசியலமைப்பையும் தயாரிப்பதற்காக பெற்றுக்கொண்ட வாக்குவீதத்தையும் வாக்குகளையும் எம்மால் பெற முடியுமாயின் அதனை அடிப்படையாகக் கொண்டு நாம் அரசியலமைப்பு சபையொன்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மை தொடர்பில் சிந்திக்காது கூட்ட வேண்டும். இந்த தேர்தல் முறைமை இருந்திருந்தால் அவரால் மூன்றில் இரண்டை பெற முடியாதல்லவா. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாத தேர்தல் முறைமையை உருவாக்கியதன் பின்னர் நாட்டு மக்கள் தமது இறைமையை செயற்படுத்துவதற்குள்ள வழிமுறை என்ன?''
என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வாசுதேவ நாணயக்கார, பெத்திகட நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார். கடந்த ஆட்சியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு, புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி அதன் முதலாது அமர்வு நடைபெற்றது. எம்.ஏ.சுமந்திரனும் இந்த செயற்பாட்டில் முக்கிய இடம் வகித்தார். கடந்த ஆட்சியின் இறுதிக்காலப் பகுதியில் இந்த கலந்துரையாடல்களின் அடிப்படையில் சில வரைபுகளும் தயாரிக்கப்பட்டிருந்தன.