மீண்டும் பேசுபொருளாகியுள்ள MCC உடன்படிக்கை

மீண்டும் பேசுபொருளாகியுள்ள MCC உடன்படிக்கை

மீண்டும் பேசுபொருளாகியுள்ள MCC உடன்படிக்கை

எழுத்தாளர் Bella Dalima

16 Jun, 2020 | 7:58 pm

Colombo (News 1st) கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய தலைப்பாக இருந்த MCC உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் அதிகளவில் பேசப்படுகிறது.

அரசாங்கத்தின் பல பங்காளி தரப்புகள் இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பை தெரிவித்ததுடன், இத்தகைய பாதகமான உடன்படிக்கைகள் எதுவும் கைச்சாத்திடப்பட மாட்டாது என ஜனாதிபதி தேர்தல் மேடையில் அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பொதுத் தேர்தலின் பின்னர் MCC உடன்படிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்ததாக இன்று பத்திரிகைகள் செய்தி வௌியிட்டுள்ளன.

போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் காணி சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெறும் வகையில், MCC எனப்படும் அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கு கடந்த ஆட்சியில் யோசனை முன்வைக்கப்பட்டது.

பொதுத் தேர்தல் நிறைவுபெறும் வரை MCC உடன்படிக்கை தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காத்திருப்பதாக அமெரிக்க தூதுவரை மேற்கோள்காட்டி பத்திரிகைகள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவெளை, MCC நிதி உதவிக்கான கால எல்லை கிடையாது என இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் நான்சி வென்ஹோர்ன் (Nancy VanHorn) இன்று மற்றுமொரு பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

MCC தொடர்பில் அமெரிக்கா அவ்வப்போது வௌியிடும் இந்தக் கூற்றுகள் எதனை எடுத்தியம்புகின்றன?

உரிய கால எல்லை இல்லை என அவர்கள் இன்று கூறினாலும் MCC-இன் இலங்கை பணிப்பாளர் ஜெனரல் எட்ல்மன் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்து வருவதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கூறியிருந்தார்.

இவ்வாறு கூறப்பட்டு 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில், MCC உடன்படிக்கைக்கு உரிய கால எல்லை இல்லை என அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ACSA உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதுடன், அந்த உடன்படிக்கை கடந்த ஆட்சியில் மேலும் விஸ்தரிக்கப்பட்டது.

இந்த இரண்டு உடன்படிக்கைகளும் இராணுவ செயற்பாடுகள் தொடர்பிலேயே தாக்கம் செலுத்துகின்றன.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சேவை வழங்கும் Western Global Airlines நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு போக்குவரத்து விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதன் பின்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தகைய விமானங்கள் மூலம் பல்வேறு பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

வௌிநாடுகளில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்களில் இருந்தே Western Global நிறுவனத்தின் ஒரு சில விமானங்கள் இலங்கைக்கு வந்திருந்தன.

இந்த பின்புலத்தில் மீண்டும் MCC உடன்படிக்கை பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த உடன்படிக்கை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட லலிதசிறி குணருவன் தலைமையிலான குழுவும் இறுதிக்கட்ட அறிக்கையை தயாரித்து வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்