அர்ஜான் அலெக்சாண்டர் என பெயரை மாற்றிய அர்ஜூன மகேந்திரன்

அர்ஜான் அலெக்சாண்டர் என பெயரை மாற்றிய அர்ஜூன மகேந்திரன்

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2020 | 12:10 pm

Colombo (News 1st) முறிகள் மோசடி தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன், பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் தெரிவித்துள்ளதாக சட்ட மா அதிபர், மேல் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்தார்.

அர்ஜூன மகேந்திரன் தனது பெயரை அர்ஜான் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் தெரிவித்துள்ளதாக, மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சட்ட மா அதிபர் இன்று அறிவித்தார்.

சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணை இடம்பெற்ற போதே இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வசிக்கும் அர்ஜூன மகேந்திரனை, நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் நாட்டிற்கு வரவழைத்தல் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் சர்வதேச பொலிஸார் அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலிந்த ரணசிங்க குறிப்பிட்டார்.

வழக்கின் 10 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள, Perpetual Treasuries நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான தற்போது சிங்கப்பூரில் வசித்து வருவதாக கூறப்படும் அஜஹான் கார்திய புஞ்சிஹேவா என்ற நபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அறிவித்தல் அனுப்புவதற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளமைக்கு எதிராக அஜஹான் கார்திய புஞ்சிஹேவா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரீட் மனு தொடர்பான உத்தரவு, எதிர்வரும் 18 ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலிந்த ரணசிங்க குறிப்பிட்டார்.

அதற்கமயை, முறிகள் மோசடி தொடர்பான வழக்கு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்