by Staff Writer 15-06-2020 | 2:46 PM
Colombo (News 1st) இலங்கை புலனாய்வப் பிரிவு பொலிஸ் கான்ஸ்டபள் உயிரிழந்த விபத்துடன் தொடர்புடைய டிப்பென்டரின் சாரதி தரிந்த ரத்வத்தே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் H. பிரபாகரன் சந்தேகநபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு - தும்முல்ல பகுதியில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கடந்த 11ஆம் திகதி பொலிஸ் புலனாய்வுப்பிரிவின் 2 உத்தியோகத்தர்களை காயப்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் சட்டக்கல்லூரி மாணவராவார்.
சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவில்லை.
எனினும், எதிர்வரும் 19 ஆம் திகதி சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் H. பிரபாகரன் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் தும்பற வைத்தியசாலையில் சிறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்றில் இன்று அறிவிக்கப்பட்டது.
சந்தேகநபர் தொடர்பான மருத்துவ சான்றிதழை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு மேலதிக நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த இரண்டு கான்ஸ்டபள்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றையவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண அறிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான CCTV காணொளியை பெற்று மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
இது திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட விபத்து இல்லை எனவும் திடீரென இடம்பெற்ற ஒன்றெனவும் விபத்தில் உயிரிழந்தவருக்கும் காயமடைந்துள்ளவருக்குமான உரிய நட்டஈட்டை செலுத்த தயாராகவுள்ளதாகவும் சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ மன்றிற்கு இன்று அறிவித்துள்ளார்.