பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இந்திய அதிகாரிகள்

காணாமற்போன 2 இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் புலனாய்வுப்பிரிவின் கட்டுப்பாட்டில்

by Staff Writer 15-06-2020 | 6:16 PM
Colombo (News 1st) பாகிஸ்தான், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து காணாமல்போன ஊழியர்கள் இருவரும் பாகிஸ்தான் உள்நாட்டு புலனாய்வுப்பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. வௌிவிவகார அமைச்சு பாகிஸ்தான் தூதுவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் சாரதிகளாக கடமையாற்றும் ஊழியர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இந்தியா முறையிட்டதாக கூறப்படுகின்றது. இன்று (15) காலை 8 மணி முதல் இருவரும் காணாமற்போயுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உளவு பார்த்த குற்றச்சாட்டில் டில்லியிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்டனர். குறித்த அதிகாரிகள் இருவரும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்பவர்களுக்கு விசா வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் இருவரும் இந்திய அரசின் முக்கிய ஆவணம் ஒன்றை கைப்பற்ற முயற்சித்ததாகக் கூறப்பட்டது. இதனை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.