பூசா சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டினருகே T56 ரக 5 தோட்டாக்கள் கண்டெடுப்பு…

பூசா சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டினருகே T56 ரக 5 தோட்டாக்கள் கண்டெடுப்பு…

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2020 | 8:12 pm

Colombo (News 1st) சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறுவதாக கூறப்படும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகிறது.

அண்மைக் காலமாக நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது, கையடக்கத் தொலைபேசிகள், போதைப்பொருள் மற்றும் பல சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் வௌிக்கொணரப்பட்டது.

இதேவேளை, பூசா சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவரின் வீட்டுக்கு முன்பாக அவரின் பெயரைக் குறிப்பிட்டு, வீசப்பட்டிருந்த சில தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.

பூசா சிறைச்சாலையில் பணிபுரியும் காவல் அதிகாரி இன்று (15) காலை 6.20 மணியளவில் கடமைகளுக்காக செல்வதற்கு வீட்டின் கதவைத் திறந்தபோது இந்தத் தோட்டக்களைக் கண்டுள்ளார்.

அதிகாரியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த T56 ரக 5 தோட்டாக்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

காலி குற்றப்புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று ஆரம்ப விசாரணைகளை ஆரம்பித்ததுடன், பொலிஸ் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன.

கடந்த 6ஆம் திகதி பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அவசர சுற்றிவளைப்பின் போது திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்ட கஞ்சிப்பானை இம்ரானின் சிறைக்கூண்டில் சூட்சுமாக மறைத்துவைக்கப்பட்டிருந்த, 2 கையடக்கத் தொலைபேசிகள், 2 சிம் அட்டைகள் உள்ளிட்ட சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சுற்றிவளைப்பிற்கு குறித்த, பிரதான சிறைச்சாலை காவலதிகாரி பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்ததுடன், அவர் பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான பல சுற்றிவளைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்.

இதேவேளை, வாரியபொல சிறைச்சாலைக்கு சூட்சுமாக மறைத்து சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படவிருந்த சில பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கனேவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் இருந்து 5 கையடக்கத் தொலைபேசிகள், 5 சாஜர்கள், 2.5 கிராம் ஹெரோயின், 2 கிராம் புகையிலை மற்றும் மதுபான போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்ட அந்த பொருட்கள் வாரியபொல சிறைச்சாலையின் கழிவுநீர் அகற்றும் கால்வாயில் இடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தாக சந்தேகநபர் பொலிஸாரிடம் குறிப்பிட்டிருந்தனர்.

சந்தேக நபரை கைது செய்ய சென்றபோது அவர் தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயதான அந்த சந்தேக நபர் பன்சியகம பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன், அவர் நாளை குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்