லீசிங் தொடர்பில் கலந்துரையாடத் திட்டம் 

லீசிங் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை: அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவிப்பு

by Staff Writer 13-06-2020 | 3:56 PM
Colombo (News 1st) லீசிங் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். லீசிங் திட்டங்களினூடாக முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்களை கொள்வனவு செய்வோர் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். எவ்வித மனிதநேயமும் அற்ற விதத்தில், மக்களை பாரிய அசௌகரியங்களுக்குள்ளாக்கி சில லீசிங் நிறுவனங்கள் செயற்படுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து மக்களை மீட்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் இந்த விடயம் தொடர்பில் சிறந்த ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் வரையறைகளை தயாரித்தல் அவசியம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதேவேளை, லீசிங் நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களினால் வாகனங்கள் மீள பறிமுதல் செய்யப்படுகின்றமை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். வாகனங்களை பறிமுதல் செய்கின்றமை தொடர்பில் லீசிங் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார். எனினும், தவணைக் கட்டணம் செலுத்தாமையால் லீசிங் நிறுவனங்களால் தங்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொதுமக்களால் வழங்கப்படும் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளுமாறும் பதில் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு கூறியுள்ளார். பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை, இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையின் திருட்டு மற்றும் கொள்ளையிடுதல் குற்றங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.