முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தனவின் இறுதிக்கிரியைகள் நாளை

by Staff Writer 13-06-2020 | 8:14 PM
Colombo (News 1st) பல்வேறு கனவுகளுடன் பயணித்த முச்சக்கர வண்டி சாரதிகளின் தலையில் கொரோனா பேரிடியாக இறங்கியது. லீசிங் கடனை செலுத்துவதற்கு 6 மாத சலுகைக் காலம் கிடைக்கும் என மத்திய வங்கி அறிவித்தாலும் அது கிடைக்காத காரணத்தால் அது குறித்து விசாரிப்பதற்காக சென்ற முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தலைவர் சுனில் ஜயவர்தன கொல்லப்பட்டார். அன்னாரின் பூதவுடல் பிலியந்தலை - மிரிஸ்வத்தையிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடனை செலுத்தத் தாமதித்த தனது சகாவிற்கு சலுகை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் துணிவுடன் முன்வந்த சுனில் ஜயவர்தனவின் உயிர் பலிகொள்ளப்பட்டது. அவர் நுகேகொடை - அம்புல்தெனிய நிதி நிறுவனத்தில் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். லீசிங் கொடுப்பனவை செலுத்தத் தவறியதன் காரணமாக சுனில் ஜயவர்தனவின் சகாவினுடைய முச்சக்கரவண்டியை குறித்த நிதி நிறுவனம் பறிமுதல் செய்தது. அரசாங்கம் அறிவித்துள்ள வேலைத்திட்டங்களின் பிரகாரம், சலுகை வழங்குமாறு கோரி சுனில் ஜயவர்தன தொடர்ச்சியாக குரல் எழுப்பிய போதிலும் இறுதியில் தன் உயிரையே பலி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. கொல்லப்பட்ட சுனில் ஜயவர்தன இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் சுனில் ஜவர்தனவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிலியந்தலையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்றவண்ணமுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட சுனில் ஜயவர்தனவின் இறுதிக்கிரியைகள் கெஸ்பேவ பொது மயானத்தில் நாளை (14) நடைபெறவுள்ளன.