நாட்டின் சில பகுதிகளில் மாதிரி தேர்தல் நடைபெற்றது

by Staff Writer 13-06-2020 | 8:11 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான மாதிரி வாக்களிப்பு தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் இன்றும் நடைபெற்றன. மாத்தளை மாவட்ட மாதிரி தேர்தல் வாக்களிப்பு இறத்தோட்டை லோங்வில் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. தேர்தல் திணைக்கள ஆணையாளர் சமன்ஶ்ரீ ரத்நாயக்க தலைமையில் இந்த ஒத்திகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முகக்கவசங்களை அணிந்தவாறு வந்திருந்த வாக்காளர்கள் காலை 9 மணி முதல் 11 மணி வரை ஒத்திகை வாக்களிப்பில் கலந்து கொண்டனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பங்குபற்றுதலில், நீர்கொழும்பு வேல்ல வீதியிலுள்ள புனித செபஸ்டியன் பாடசாலையில் மாதிரித் தேர்தல் நடைபெற்றது. சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சுமார் 200 பேர் இதன்போது வாக்களித்தனர். கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் ஜயலத் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். இதேவேளை, புத்தளம், மாத்தளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தியும் தேர்தல் அதிகாரிகளின் பங்குபற்றுதலில் மாதிரித் தேர்தல் நடத்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் 15 மாதிரித் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதுடன், நாளையும் எதிர்வரும் 20 ஆம் திகதியும் அவை நடைபெறவுள்ளன.