முல்லைத்தீவில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

முல்லைத்தீவில் கிணற்றில் வீழ்ந்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு

by Staff Writer 12-06-2020 | 4:05 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். சிறுவன் வீட்டிலில் இல்லாததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதப் பரிசோதனை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, புத்தளம் - முந்தல், தவதன்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நீர் நிரம்பிய மலசல கூட குழிக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். 28 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் மரண வீடொன்றுக்கு சென்ற இளைஞர், அங்கிருந்த சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அங்கிருந்து தப்பிச்சென்ற போதே இளைஞர் மலசல கூட குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இளைஞரின் சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.