முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆர்ப்பாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட விதம் தொடர்பில் வாசுதேவ அதிருப்தி

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆர்ப்பாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட விதம் தொடர்பில் வாசுதேவ அதிருப்தி

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2020 | 7:44 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் அடக்குமுறை கொள்கைக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செயற்பட்ட விதத்தை முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விமர்சித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி மற்றும் லிப்டன் சுற்றுவட்டத்தை அண்மித்து முன்னிலை சோசலிசக் கட்சி அமெரிக்காவின் அடக்குமுறை கொள்கைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது, முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் வாசுதேவ நாணயக்கார அதிருப்தி வௌியிட்டார்.

அமெரிக்க தூதுவராலயத்தின் முன்பாக அந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தால் அதனை அமெரிக்காவும் பொலிஸாரும் கட்டுப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்திருக்க வேண்டும். அதனை தடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டமை தொடர்பில் எனக்குத் தெரியாது. இங்கு உத்தரவு வழங்கியதே தவறு. முழு உலகமும் குரல் கொடுக்கும் அநீதி தொடர்பாக, உலகத்திலுள்ள அனைவருக்கும் இருக்கின்ற வாய்ப்பை இலங்கையிலுள்ள எங்களுக்கு இல்லாமல் செய்வது சரியில்லை. தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாகவே எதிர்ப்பு முன்னெடுக்கப்பட வேண்டும். பொலிஸாரின் செயற்பாடு அனுமதிக்க முடியாதளவு அநாவசியமானதாக இருந்தது. இந்த மோதல் ஏற்பட்ட விதம் குறித்து பார்க்கும் போது, அது எங்களுடைய அரசாங்கத்தின் கொள்கைக்கும், அரசாங்கம் இதுவரை ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் செயற்பட்ட முன்னுதாரணமான நிலைமைக்கும் எதிரான, எம்மால் அனுமதிக்க முடியாத நிலையே தோன்றியுள்ளது

என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

இதேவேளை, பொலிஸார் கடும் தடுப்புக் கொள்கைகளை பின்பற்றும் அதேவேளை, வெவ்வேறு தரப்பினரை மாறுபட்ட விதத்தில் கவனிப்பதாக நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித மனப்பான்மை தோன்றியுள்ளதென பதில் பொலிஸ் மா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியதாக லங்காதீப பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வின்போது பொலிஸார் செயற்பட்ட விதமும், ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நடந்துகொண்ட விதமும் நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித மனப்பான்மை தோன்றக் காரணமாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், பதில் பொலிஸ் மா அதிபரை சந்தித்த போது இதனை தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்க தூதரக முன்றலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க முயன்ற சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு, முன்னிலை சோசலிசக் கட்சியினர் இன்று சென்றிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்