ஆகஸ்ட் முதல்  சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

by Staff Writer 12-06-2020 | 3:54 PM
  எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நாட்டிற்கு வருகை தருவதற்கு வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், குறைந்தபட்சம் 5 நாட்கள் நாட்டில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகை தருவதற்கு குறைந்தபட்சம் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் PCR பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார். இதன் முதல் கட்டத்தில் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சீனாவிலிருந்தும் இந்தியாவின் சில பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.