சிறு கடன் பெற்றுக்கொண்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சுனில் ஜயவர்தன படுகொலை

by Staff Writer 11-06-2020 | 8:45 PM
Colombo (News 1st) நுகேகொடை - எம்புல்தெனியவிலுள்ள நிதி நிறுவனமொன்றின் வளாகத்தில் சிறு கடன் பெற்றுக்கொண்டவர்களின் உரிமைகளுக்காக முன்நின்ற சுனில் ஜயவர்தன தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுயதொழில் முயற்சியாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவராக சுனில் ஜயவர்தன செயற்பட்டு வந்தார். தரிப்பிடங்களில் உள்ள அப்பாவிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் பாதாள உறுப்பினரைப் பயன்படுத்தி மக்களைத் தாக்கி வாகனங்களை எடுத்துச்செல்லும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் சில தினங்களுக்கு முன்னர் சுனில் ஜயவர்தன குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் அவர் நுகேகொடை எம்புல்தெனிய சந்தியிலுள்ள நிதி நிறுவனத்தில் நேற்று (10) மாலை தாக்கப்பட்டார். சுயதொழில் முயற்சியாளர்களின் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவரின் முச்சக்கர வண்டிக்கான தவணைக் கொடுப்பனவு செலுத்தப்படவில்லை என தெரிவித்து அந்த நிதி நிறுவனத்தினால் முச்சக்கர வண்டி எடுத்துச்செல்லப்பட்டமை தொடர்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த சுனில் ஜயவர்தன களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்றிரவு உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட சுனில் ஜயவர்தனவின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது. ஜயவர்தனவின் மனைவி இன்று பகல் வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை அடையாளம் காட்டினர். 53 வயதான சுனில் ஜயவர்தன இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இதேவேளை, இந்தக் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். சுயதொழில் முயற்சியாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் பூதவுடல் பிலியந்தலை மிரிஸ்வத்தயிலுள்ள அன்னாரின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.