ஏப்ரல் 21 தாக்குதல்: நந்தன முனசிங்கவிடம் விசாரணை

ஏப்ரல் 21 தாக்குதல்: மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவிருந்த நந்தன முனசிங்கவிடம் விசாரணை

by Staff Writer 11-06-2020 | 8:02 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் சாட்சி விசாரணை இடம்பெற்றது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க இன்று காலை சாட்சியமளித்தார். ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நந்தன முனசிங்க செயற்பட்டார். தாக்குதல் தொடர்பிலான புலனாய்வுத் தகவலை அடிப்படையாகக் கொண்டு பொலிஸாருக்குக் கிடைத்த கடிதம் தொடர்பில் முனசிங்கவிடம் ஆணைக்குழு வினவியது. பொலிஸ் மா அதிபரின் கையொப்பத்துடனான கடிதமொன்று, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி தமது அலுவலகத்திற்குக் கிடைத்ததாக அவர் கூறினார். திங்கட்கிழமை அது தமக்குக் கிடைத்ததாகவும் முனசிங்க தெரிவித்தார். அந்தக் கடிதம் அலுவலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டதா, இல்லையா என ஆணைக்குழு வினவியபோது, தாம் அதனைச் செய்யவில்லை என சாட்சியாளர் கூறினார். கடிதத்தில் குறிப்பிடப்பட்டவாறு, அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக அதனைத் தமது பொறுப்பில் வைத்திருந்ததாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்தார். அந்த செயற்பாடு சரியானதா என ஆணைக்குழு மீண்டும் வினவியது. ''அதுவே எனது நடைமுறை. தேவையில்லாவிட்டால் அழிக்கவும் முடியும்'' என நந்தன முனசிங்க பதிலளித்தார். பொலிஸ் மா அதிபரின் குறிப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில், மறு தினமேனும் பொலிஸ் மா அதிபரிடம் தொலைபேசியூடாகக் கேட்டீர்களா என ஆணைக்குழு வினவியது. அவ்வாறு வினவவில்லை என அவர் பதிலளித்தார். குறித்த கடிதத்தின் பாரதூரத்தன்மையினை அந்தத் தருணத்தில் தாம் அறியவில்லை எனவும் நந்தன முனசிங்க கூறினார். பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் அழைத்து வினவியிருந்தால், இந்த நிலையில் நிச்சயம் மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.