இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பழைய ஆவணங்களை அழிக்க முயற்சி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பழைய ஆவணங்களை அழிக்க முயற்சி

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2020 | 9:26 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பல மோசடிகள் கடந்த காலங்களில் அம்பலமாகின.

அவற்றில் மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு , விசாரணைகள் நடைபெறுவதுடன், மேலும் சில கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பாராளுமன்ற ​கோப் குழுவிலும் இவை தொடர்பாக பல விடயங்கள் வௌிக்கொணரப்பட்டன.

அவ்வாறான நிலையில், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தகவல் அறியும் சட்டமூலத்திற்கு புறம்பாக நிறுவனத்தின் பழைய ஆவணங்களை அழிக்க தயாராகி வருவதாக தகவல் வௌியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த காலத்தில் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு தொகை ஆவணங்கள் கொழும்பு – கெத்தாராம மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கொத்தாராம மைதானத்தில் இட வசதியை ஏற்படுத்துவதாகத் தெரிவித்து இந்த ஆவணங்கள் உள்ளிட்ட ஒரு தொகை பொருளை அழிக்க வேண்டும் என 2019 மார்ச் 30 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று அதிகாரக் குழுவில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரக் குழுவுக்கு இந்த யோசனையை சுஜீவ கொடலியத்த முன்வைத்திருந்தார்.

இந்த யோசனை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் சட்டப்பிரிவு பரிந்துரையில் பத்து வருடங்களுக்கு மேற்பட்ட பழைய ஆவணங்களை அழிப்பதில் தடையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம், பத்து வருடங்களுக்கு மேற்பட்ட தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு இல்லை என சட்டப்பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரைகள் மீண்டும் நிறைவேற்றுக்குழுவில் முன்வைக்கப்பட்டு , கடந்த மே மாதம் 29 ஆம் திகதி ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் கெத்தாராம மைதானத்தில் வைத்துள்ள ஆவணங்கள் இன்னும் அப்புறப்படுத்தப்படாவிட்டாலும் அவை எந்தத் தருணத்திலும் அகற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்ட மூலத்தை பயன்படுத்தி ஆவணங்களை அழிக்க முற்படுவது மோசடி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளை மறைப்பதற்காகவா?

மக்களிடம் தகவல்களை மறைத்தாலும் நீதிமன்றம் மற்றும் விசாரணை அதிகாரிகளிடம் தகவல்களை மறைப்பதற்கு சட்டரீதியான பாதுகாப்பு உள்ளதா?

இந்த ஆவணகள் இன்னும் அழிக்கப்படவில்லை என்றே அறியக்கிடைத்துள்ளது.

எதிர்கால விசாரணைகளுக்கு இந்த ஆவணங்கள் தேவைப்பட்டால் அவற்றை அழிக்கும் முன்னர், அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டுமல்லவா?

விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பாக உடனடிக் கவனம் செலுத்தத் தவறினால் இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களுக்கு என்ன நடந்தது என்பதையே அறிந்துகொள்ள முடியாது போகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்