பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி

வரையறைகளுடன் மத வழிபாட்டுத் தலங்கள், பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி

by Staff Writer 10-06-2020 | 6:50 PM
Colombo (News 1st) வரையறைகளுடன் மத வழிபாட்டுத் தலங்கள், பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மத வழிபாட்டுத் தலங்களில் வரையறைகளுடன் ஒன்று கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிப்பாட்டுத் தலங்களில் ஒரே தடவையில் 50 பேர் வரை ஒன்று கூடி வழிபாடுகளில் ஈடுபட முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக இடைவௌியைப் பேணி 50 பேர் வரை ஒன்றுகூட முடியாத வழிப்பாட்டுத் தலங்களில், சமூக இடைவௌியுடன் இருக்கக்கூடிய அதிகபட்ச ஆட்களை மாத்திரம் அனுமதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வரையறைகளுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் காணப்படும் இடப்பரப்பிற்கு அமைய, சமூக இடைவௌியுடன் ஒரு வகுப்பில் அதிகபட்சம் 100 மாணவர்களை மாத்திரமே இணைத்துக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஒரே தடவையில் 100 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத வகுப்பறைகளில் , சமூக இடைவௌியுடன் இணைத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச மாணவர்களை மாத்திரமே அமர்த்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சுகாதார தரப்பினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை அனைத்து தரப்பினரும் தொடர்ந்தும் பேண வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.