by Bella Dalima 10-06-2020 | 3:30 PM
Colombo (News 1st) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான வைத்தியர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வைத்தியர் இவ்வாறான குற்றச்செயல்களுடன் ஏற்கனவே தொடர்புபட்டுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகநபரான குறித்த வைத்தியர் தொடர்பில் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஹொரணையைச் சேர்ந்த 35 வயதுடைய வைத்தியரே திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
மூன்று வருடங்களுக்கும் அதிகக் காலம் தேசிய வைத்தியசாலையில் சேவையாற்றிய குறித்த வைத்தியர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
வைத்தியசாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டிருந்த நிதியே கொள்ளையிடப்பட்டிருந்தது.
பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற நபரை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.