எதிர்ப்பு நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் காரணமாக சீன தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு

by Staff Writer 10-06-2020 | 8:58 PM
Colombo (News 1st) அமெரிக்க சர்வாதிகாரத்தைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தயாரான முன்னிலை சோசலிசக் கட்சி உறுப்பினர்கள் நேற்று (09) பொலிஸாரின் தலையீட்டில் கலைக்கப்பட்டனர். இதேவேளை, இன்று மற்றுமொரு தரப்பினர் சீன தூதுவராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். எனினும், பொலிஸாரின் தலையீட்டினால் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டதனால், அந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை. சீனாவின் கவனயீனம் காரணமாக உலகம் பூராகவும் கொரோனா பரவியது என குற்றஞ்சாட்டி நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு சீன தூதுவராலயத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தயாராகியிருந்தனர். எனினும், இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிவித்த கறுவாத்தோட்ட பொலிஸார் இந்த எதிர்ப்பு நடவடிக்கையைத் தடுக்குமாறு நீதிமன்றத்தினை கோரியிருந்தனர். COVID-19 பரவும் அபாய நிலைமையின் கீழ் குற்றவழக்கு 106 சரத்திற்கு அமைவாக இந்த எதிர்ப்பை உடனடியாக தடுப்பதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இன்று காலை பொலிஸ் விசேட அணிகள் சில சீன தூதுவராலயத்தின் முன்பாக பாதுகாப்பில் ஈடுபட்டன. எவ்வாறாயினும் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறவில்லை. இதேவேளை, நேற்றைய ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் Alaina Teplitz ட்விட்டர் பக்கத்தில் தகவலொன்றை பதிவேற்றியுள்ளார். COVID-19 தொற்று காரணமாக, ஒன்றுகூடுவதற்கான வரையறைகளுக்கு அமைய, தூதரகத்திற்கு முன்பான ஆர்ப்பாட்டத்தை இலங்கை அரசாங்கம் தடுத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகள், சட்டத்திற்கு முன் சமவுரிமை, பாதுகாப்பு பிரிவுகளின் பொறுப்புணர்வு ஆகியவற்றை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக்கொள்வதுடன், COVID-19 தொற்று பரவக்கூடிய அவதானத்தை கருத்திற்கொண்டே அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டர் தகவலில் தெரிவித்துள்ளார்.