முன்னிலை சோசலிசக் கட்சியின் போராட்டம் கலைப்பு: குமார் குணரட்னம் உள்ளிட்ட 42 பேர் கைது

by Staff Writer 09-06-2020 | 8:21 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் ஒடுக்குமுறையைக் கண்டித்து முன்னிலை சோசலிசக் கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு நடவடிக்கையை பொலிஸார் தடுத்தனர். நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரத்னம் உள்ளிட்ட 42 பேரை பொலிஸார் இன்று கைது செய்தனர். இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கொள்ளுப்பிட்டி சந்தியில் முன்னிலை சோசலிசக் கட்சியினர் கூடியபோது பொலிஸார் உடனடியாக அவர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை தடுக்கும் வகையில், நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக அறிவித்த பொலிஸார், கூடியிருந்தவர்களை கைது செய்யவும் கலைக்கவும் நடவடிக்கை எடுத்தனர். கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கொழும்பு - கொள்ளுப்பிட்டி சந்தியில் எதிர்ப்பு நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதால், முன்னிலை சோசலிசக் கட்சி உறுப்பினர்கள் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகே மீண்டும் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர். சமூக இடைவௌியை பேணும் வகையிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கொள்ளுபிட்டியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். குறித்த இடத்திற்கும் விரைந்த பொலிஸார் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் சிலர் இன்று பிற்பகல் துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
தூதரகத்திற்கு அருகே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அதிகளவிலானவர்கள் தூதரகத்திற்கு அருகில் கைது செய்யப்படவில்லை. நகர மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினமே அவர்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எமக்கு அறிவிக்கப்பட்டது
என சட்டத்தரணி ரவிஹார பின்னதூவ குறிப்பிட்டார்.