இடம்பெயர்ந்தோருக்கான 5000 ரூபா கொடுப்பனவில் இழுபறி

புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்தோருக்கான 5000 ரூபா கொடுப்பனவில் இழுபறி; விடயத்தில் கவனம் செலுத்துமாறு ரிஷாட் பதியுதீன் கோரிக்கை

by Staff Writer 09-06-2020 | 8:07 AM
Colombo (News 1st) வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கும் 5,000 ரூபா கொடுப்பனவினை அம் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பவர்கள் தொடர்பில் உரிய கவனத்தினை செலுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வேண்டியுள்ளார். அதனை அம் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 5,000 ரூபா கொடுப்பனவை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம், கல்பிட்டி, முந்தல், வண்ணாத்திவில்லு உள்ளிட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் வாழும் மக்களுக்கு வழங்குவதில் இழுபறிநிலை காணப்பட்டதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். குறித்த மக்களது இந்தப் பிரச்சினை தொடர்பில், அரசாங்க அதிபர்களுடன் பேசியுள்ளதாகவும் இதற்கான நிதி இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்ற பதிலையே அவர்களால் கொடுக்க முடிந்துள்ளதாகவும் இந்த நிதியினை வழங்காமல் தடுக்கும் செயற்பாடுகள் ஏதும் இடம்பெறுமெனில் அதனை கவனத்திற்கொள்ளுமாறு அவர் பிரதமரிடம் வேண்டியுள்ளார். இதேவேளை, இடம்பெயர்ந்த இந்த மக்கள் கடந்த தேர்தலில் ஜனநாயக ரீதியில் வாக்களிக்க செல்வதிலும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் இதற்காக வேண்டி ‘வடக்கு இடம்பெயர்ந்த மக்கள் அமைப்பினரால்’ மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளையும் அரசியல் காழ்ப்புணர்வுடன் சிலர் நோக்கியதாக ரிஷாட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 ரூபா உதவித்தொகை கிடைக்காமல் இருப்பதன் பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.