ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2020 | 8:01 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்கி எழுத்தாணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 104H1 ஆம் சரத்திற்கிணங்க குறித்த மனுவை விசாரிக்கும் சட்டரீதியான அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லையெனவும், குறித்த கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் சட்ட ரீதியான அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மாத்திரமே உள்ளதெனவும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மெரின் புள்ளே அடிப்படை ஆட்சேபனை முன்வைத்தார்.

அடிப்படை ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அளுவிகாரே, L.T.B. தெஹிதெனிய மற்றும் பத்மன் சூரசேன ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

‘அபே ஜாதிக பெரமுன’ என்ற கட்சியின் பதிவை பயன்படுத்தியே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளதெனவும், கட்சியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமித்த போது அபே ஜாதிக பெரமுனவின் செயற்குழுவின் அனுமதி முறையாக பெறப்படவில்லையெனவும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும், சட்டவிரோதமான பொதுச்செயலாளரின் கையொப்பத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களை செல்லுபடியற்றது எனவும், மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நெரஞ்சன் டி சில்வா சுட்டிக்காட்டினார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் பதவிகள் மற்றும் கட்சியின் யாப்பினை மாற்றும் சந்தர்ப்பத்தில் 30 நாட்களுக்குள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறு செய்யவில்லை என மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்