ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 43 பேர் கைது 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 43 பேர் கைது 

by Staff Writer 09-06-2020 | 1:45 PM
Colombo (News 1st) ஜோர்ஜ் ஃப்ளொய்டின் கொலை உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர் இன்று கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் கலைக்கப்பட்டது. இன்று மதியம் கொள்ளுப்பிட்டியில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதுவராலயத்திற்கு அண்மையில் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர். இதன்போது, முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி எதிர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் அமெரிக்க தூதரகம் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க முயன்ற நிலையில், அதனை தடுத்த பொலிஸார் செயற்பாட்டாளர்களைக் கைது செய்தனர். முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டோர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதனிடையே, முன்னிலை சோசலிசக் கட்சியின் மற்றுமொரு பிரிவினர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் போராட்டத்தை ஆரம்பித்தனர். குமார் குணரட்ணம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார். கொழும்பு, கொள்ளுப்பிட்டி மற்றும் லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னிலை சோசலிசக் கட்சியின் 42 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.