தேர்தல் திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும்

by Chandrasekaram Chandravadani 08-06-2020 | 5:37 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தல் நடாத்தப்படும் திகதியை இவ் வாரத்தில் அறிவிப்பதற்கு  தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று (08) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். மாதிரி ​தேர்தல் ஒத்திகைகள் யாழ். தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வேட்பாளர்களுக்காக விருப்பு வாக்கு இலக்கங்களை உள்ளடக்கிய வர்த்தமானி நாளை (09) வௌியிடப்படவுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது கூறியுள்ளார். தேர்தல் செலவீனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று மதியம் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில் கலந்துரையாடலில் ஈடுபட்டது. இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களுக்கான நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலையில் வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு அதிக காலம் தேவைப்படுவதாக அரச அச்சகர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஒரு கோடியே 69 இலட்சத்திற்கும் அதிக வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதாக கங்கா கல்பனி லியனகே கூறியுள்ளார். அச்சிடப்படும் வாக்குச்சீட்டுக்கள், பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்படும் என அரச அச்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.  

ஏனைய செய்திகள்