ஜனாதிபதி முன்வைத்துள்ள வேண்டுகோள் 

தமது பெயரை பயன்படுத்தி அழுத்தம் பிரயோகிப்பது தொடர்பில் அறியத்தருமாறு ஜனாதிபதி கோரிக்கை

by Staff Writer 08-06-2020 | 7:18 PM
Colombo (News 1st) தமது பெயரைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் அழுத்தம் தொடர்பில் உடனடியாக அறியத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறான மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் உள்ளக நிர்வாகம் தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் K.B. எகொடவெலேவுக்கு அறிவிக்கமுடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மோசடிக்காரர்கள் தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக ஜனாதிபதியின் பெயர், போலி கையொப்பம், போலியான கடிதத் தலைப்பு என்பவற்றை பயன்படுத்தி அமைச்சுகள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்துவருவது தொடர்பில் தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இத்தகைய நபர்கள் சில அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று சில பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அழுத்தங்கள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரிலேயே விடுக்கப்படுவதாகவும் குறித்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரியவந்துள்ளது. இவ்வாறான அழுத்தங்கள், மோசடிகள் தொடர்பில் 011 2354479 அல்லது 011 2354354 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.