by Staff Writer 08-06-2020 | 5:17 PM
Colombo (News 1st) ஜனாதிபதியின் கையொப்பத்துடனான போலி ஆவணத்தைத் தயாரித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (08) கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் - யந்தம்பலாவ, சுந்தராபொல வீதி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச வங்கியொன்றில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ள ஊழியர் ஒருவர் தொடர்பிலான நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியின் கையொப்பம் மற்றும் கடிதத்தலைப்பை பயன்படுத்தி சந்தேகநபரினால் தயாரிக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பிலான முறைப்பாடு தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றில் அறிவித்துள்ளது.