இன பாகுபாட்டிற்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டம்

George Floyd மரணம்; இனப் பாகுபாட்டிற்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டங்கள்

by Chandrasekaram Chandravadani 07-06-2020 | 10:56 AM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் இன பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் (George Floyd) என்ற கறுப்பின பிரஜை ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கடந்த 25 ஆம் திகதி கொல்லப்பட்டார். அமெரிக்காவில் இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 12 ஆவது நாளாகவும் அமைதிவழி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களில் இதுவரை 10,000 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை போன்று George Floyd க்கு அஞ்சலி நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. வொஷிங்டன் டிசியில் வௌ்ளை மாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியை "ப்ளக் லைவ்ஸ் மெட்டர் ப்ளாஸா" என நகர மேயரால் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ள மக்கள் இன பாகுபாட்டுக்கு தமது எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றினால் ஒன்றுகூடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் மீறி பொதுமக்களால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.