அழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்?

by Bella Dalima 06-06-2020 | 8:36 PM
Colombo (News 1st) கடலரிப்பு மற்றும் குப்பைகளால் கல்கிசை கடற்கரைப் பகுதி தற்போது பெரும் அழிவை எதிர்நோக்கி வருகின்றது. உள்நாட்டு மற்றும் வௌிநாட்டவரின் வரவேற்பைப் பெற்ற கல்கிசை கடற்கரைக்கு இன்று இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன? மூன்று கட்டங்களைக் கொண்ட, தென் கொழும்பு மணல் நிரப்பல் திட்டத்தின் கீழ், கெலிடோ, அங்குலானை, கல்கிசை கடற்கரைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. 890 மில்லியன் ரூபா பெறுமதியான இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் டென்மார்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 890 மில்லியன் ரூபா மக்களின் பணத்தைச் செலவிட்டு நிரப்பப்பட்ட மணல் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. தென் கொழும்பு மணல் நிரப்பல் திட்டத்தின் கீழ், கல்கிசை கடற்கரையில் ஒரு 1,50,000 கியூப் மணல் கொட்டப்பட்டது. எனினும், அவுஸ்திரேலியப் பல்கலைக்கழக பேராசிரியர் சரித் பட்டிஆரச்சி, சமுத்திரவியல் நிபுணர் ஆஷா டி வாஸ் மற்றும் நாடியா அஸ்மி ஆகியோர் தயாரித்த அறிக்கைக்கமைய இந்தத் திட்டம் உரிய முறையில் திட்டமிடப்படவில்லை என்பது தௌிவாகின்து.
இது தொடர்பில் எந்தவொரு ஆய்வோ அல்லது சுற்றாடல் மதிப்பீடோ முன்னெடுக்கப்படவில்லை என்பதை நாம் அறிவோம். 1,50,000 கியூப் மணல் கல்கிசை கடற்கரையில் கொட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. சாதாரணமாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் மணல் வரவு செலவை முன்னெடுப்போம். அது முன்னெடுக்கப்படாமையால், எவ்வளவு மணல் தேவைப்படும் என்பதை சரியாக எம்மால் கூற முடியாது. கடந்த 40 வருடங்களாக கல்கிசை கடற்கரை எவ்வாறு காணப்பட்டது என்பதை நாம் அறிவோம். பாரிய வித்தியாசம் இல்லை. கடலரிப்பு காணப்படவும் இல்லை. கடல் நீர் புகுந்த இடங்கள் கடந்த 40 வருடங்களாக அவ்வாறே காணப்பட்டன. நீதியானது எனக்கூற முடியாது. இவ்வாறான திட்டத்தின் முலம், இந்தளவு பணத்தை செலவிட்டு மணலை நிரப்ப வேண்டிய தேவையில்லை
என பேராசிரியர் சரித பட்டிஆரச்சி தெரிவித்தார். மணல் நிரப்பப்பட்டதன் பின்னர் தயாரிக்கப்பட்டதாகத் தென்படும் இந்த அறிக்கையில், இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் டென்மார்க்கின் Rohde Nielsen நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரைப் பாதுகாப்பு மற்றும் கடல்வள முகாமைத்துவத் திணைக்கள ஆய்வுப் பிரிவின் பிரதான பொறியியலாளரால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், குறித்த கொடுப்பனவு எந்த சேவைக்காக வழங்கப்பட்டது என்பதும் தௌிவுபடுத்தப்படவில்லை. கடந்த இரண்டு நாட்களாக கல்கிசை கடற்கரையில் கழிவுகள் கரையொதுங்குவதுடன், நகர சபை அதிகாரிகள், பொலிஸார், தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து சிரமதானப் பணிகளை முன்னெடுத்த போதிலும், கடற்கரையில் மீண்டும் குப்பைகள் குவிந்தன. கல்கிசையைச் சூழவுள்ள கடற்பரப்பில் தொடர்ந்தும் கழிவுகள் மிதப்பதுடன், அவற்றை அலைகள் கரைக்கு அடித்து வருகின்றன.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கழிவுகள் கரையொதுங்குவது வழமை. அதில் இளநீர் குரும்பைகள், மரத்துண்டுகள் போன்றன உள்ளடங்கும். எனினும், இங்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனே காணப்படுகின்றன
என கரையோர பாதுகாப்பு மற்றும் கடல்வள முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் இவ்வாறான பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்கள் இங்கு கரையொதுங்கியதில்லை. நாம் மணல் நிரப்பிய பகுதியே இது. இதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் இவை கடலில் இடப்பட்டனவா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது
என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாம் விசாரணையொன்றை நடத்தினோம். மொரட்டுவை மாநகர சபையினால் தயாரிக்கப்பட்ட பைகளே இவை. நீண்டகாலமாக இவை கடலில் கிடந்திருந்தால் உக்கியிருக்கும். 2020.05.14 ஆம் திகதி இது தயாரிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை, இரத்மலானை, அங்குலானை பகுதிகளிலும் இந்தக் குப்பைகள் இடப்பட்டிருக்கலாம் என எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது
என கரையோர பாதுகாப்பு மற்றும் கடல்வள முகாமைத்துவத் திணைக்களத்தின் செயலாளர் துஷார வனசிங்க குறிப்பிட்டார். எவ்வாறாயினும், கழிவுகளை முகாமைத்துவம் செய்து அவற்றை இடுவதற்கு இடமுள்ள நிலையில், கடலில் இட ​வேண்டிய எவ்விதத் தேவையும் தமக்கில்லை என மொரட்டுவை நகரசபைத் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ தெரிவித்தார். யார் எதனைக் கூறினாலும், இறுதியில் மக்களின் பணம் செலவிடப்பட்டு, மக்களே நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாரும் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.