by Bella Dalima 06-06-2020 | 3:49 PM
Colombo (News 1st) மாலியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் அல்கொய்தா அமைப்பின் வடக்கு ஆபிரிக்க தலைவர் அப்டெல்மலெக் டுரொக்டெல் (Abdelmalek Droukdel) கொல்லப்பட்டுள்ளார்.
அவருக்கு மிக நெருக்கமான உறுப்பினர்களும் அவருடன் இந்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் Florence Parly தெரிவித்துள்ளார்.
மாலியின் வடக்கு பகுதியில், கடந்த புதன்கிழமை இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, IS அமைப்பின் சிரேஷ்ட கட்டளைத் தளபதி ஒருவர், கடந்த மாதம் மாலியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமது வலிமையான இராணுவ நடவடிக்கைகள் பயங்கரவாதிகளுக்கு பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சக படைகளுடன் இணைந்து, பிரான்ஸ் இராணுவத்தினர் முன்னெடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் எனவும் Florence Parly குறிப்பிட்டுள்ளார்.