by Bella Dalima 05-06-2020 | 8:23 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர், கட்சியின் தேசிய சபைக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் தெரிவு இடம்பெறும் என கட்சியின் உப தலைவரும் ஊடகப் பேச்சாளருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் கூறினார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் தலைவருக்கான வெற்றிடம் இருந்தாலும் ஏனைய அனைத்து செயற்பாடுகளையும் தலைவர் இருக்கிறார் என்ற எண்ணத்தோடு செயற்படுத்தி வருவதாக கணபதி கனகராஜ் குறிப்பிட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அதன் உயர்மட்ட உறுப்பினர்களைக் கூட்டி தற்போதைய நிலவரம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு இடைக்கால வழிகாட்டல் ஆலோசனைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் குழுவில் காப்பாளர் முத்துசிவலிங்கம், நிர்வாக உபதலைவர் சட்டத்தரணி மாரிமுத்து, நீண்டகால உறுப்பினரும் சிரேஷ்ட உபதலைவருமான சிவராஜா, பொதுச்செயலாளர் திருமதி அனுஷியா சிவராஜா, இளைஞரணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், முன்னாள் மாகாண அமைச்சர்களாக செயற்பட்ட ஊவா மாகாண அமைச்சரான செந்தில் தொண்டமான், மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் ராமேஸ்வரன் ஆகியோர் அங்கம் வகிப்பதாக கணபதி கனகராஜ் மேலும் குறிப்பிட்டார்.