ட்ரம்ப் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் விமர்சனம்

ட்ரம்ப் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் விமர்சனம்

ட்ரம்ப் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் விமர்சனம்

எழுத்தாளர் Bella Dalima

05 Jun, 2020 | 8:00 pm

Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தை விமர்சித்துள்ள அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் (Jim Mattis) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சில நாட்கள் ஜனாதிபதி ட்ரம்புடன் நெருங்கிப் பழகிய உயர் அதிகாரியாவார்.

இந்நிலையில் அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்தை பின்வருமாறு விமர்சித்துள்ளார்.

நமது நாட்டின் அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்தே 50 வருடங்களுக்கு முன்னர் நான் இராணுவத்தில் இணைந்தேன். படைத்தலைவரான ஜனாதிபதிக்கு புகைப்படம் எடுப்பதற்காக நான் கொடுத்த அந்த சத்தியப்பிரமாணத்தின் போது இருந்த இராணுவ அதிகாரிகளிடம், அரசியலமைப்பில் பிரஜைகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க நகரங்களை யுத்த பூமியாகக் கருதி இராணுவத்தைப் பயன்படுத்தி கீழ்ப்படிய வைக்கும் மனநிலையை நாம் நிராகரிக்க வேண்டும். நமது பொது இடங்களில் தவிர்க்க முடியாத மிகவும் கடினமான சூழ்நிலைகளின் போது மாநில ஆளுநர் கோரினால் மாத்திரமே இராணுவம் அழைக்கப்பட வேண்டும். வொஷிங்டன் DC நகரில் இராணுவத்தை இறக்கியதால் இடம்பெற்ற தேவையற்ற மோதல்களை நாம் அவதானித்தோம். இவ்வாறாக இராணுவத்தை ஈடுபடுத்துவதன் மூலம் அமெரிக்க பொதுமக்களுக்கும் இராணுவத்திற்குமிடையில் தேவையற்ற மோதல் ஏற்படும்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் மேலும் கூறுகையில்,

பொதுமக்களை ஒன்றிணைக்க முயற்சிக்காத டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஜனாதிபதியை எனது வாழ்நாளில் நான் கண்டதில்லை. அவர் எம்மை பிரிக்க முற்படுகின்றார். 3 வருடங்களாக அவர் இதனை செய்கிறார். அதன் பலனையே இன்று நாம் அனுபவிக்கின்றோம். ஜனாதிபதி ட்ரம்ப்பின் முதிர்ச்சியற்ற 3 வருட கால தலைமைத்துவம் காரணமாகவே இது போன்ற துரதிர்ஷ்டவசமான நிலைமையை நாம் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இனி நாம் எமது சக்தியை பயன்படுத்தி அவரில்லாமல் ஒன்றுபட முடியும். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களுடன் நாம் ஒன்றுபடுவது சிரமமாக இருந்தாலும் ஆதி காலத்தில் நமது மூதாதையர்கள் போன்று தற்போதைய நமது மக்கள் எதிர்கால சந்ததியை கருத்திற்கொண்டு ஐக்கியப்படும் சவாலை ஏற்க வேண்டும்.

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு இணங்க முடியாது என தற்போதைய பாதுகாப்பு செயலாளரான மார்க் எஸ்பரும் (Mark Esper) ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃப்ளொய்ட் எனும் கறுப்பினத்தவரின் இறுதிக் கிரியைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் முதல் தடவையாக மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கும் தலா ஒரு மில்லியன் டொலர் பிணை வழங்க அந்நாட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்த அதிகாரிகள் மூவர் மீதும் கொலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் இரண்டாம் தர ஆட்கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குறித்த மூவருக்கும் தலா 40 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அதனைத் தவிர, சுமார் 9 நிமிடங்கள் ஜோர்ஜ் ஃப்ளொய்டின் கழுத்தை காலால் மிதித்துக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியான டெரிக் ஷாவினுக்கு இரண்டாம் நிலை ஆட்கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

இந்த 4 அதிகாரிகளுமே தற்போதைக்கு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்