by Staff Writer 05-06-2020 | 8:30 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்த அமெரிக்க தூதரக
அதிகாரி தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (04) அதிகாலை 1.30 அளவில் கட்டாரில் இருந்து வந்த விமானத்தில்
வருகை தந்த அமெரிக்க தூதரக அதிகாரி PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.
இராஜதந்திர தொடர்புகள் சம்பந்தமான வியன்னா பிரகடனம் மற்றும் தரமான செயற்பாடுகளின் பிரகாரமே,
தமது இராஜதந்திர செயற்குழு இலங்கைக்கு வருகை தருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
எனினும், விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசிக்கும் இயலுமை எவருக்கும் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
PCR பரிசோதனை தொடர்பில் நாட்டிலுள்ள வௌிநாட்டு தூதுவர் குழு பிரதிநிதிகளுக்கு தௌிவூட்டப்படவில்லை என வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இன்று கூறினார்.
இது தொடர்பில் எழுத்துமூலம் அவர்களைத் தௌிவூட்ட இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வௌிவிவகார அமைச்சின் செயலாளர் இன்று அவ்வாறு கருத்து வௌியிட்ட போதிலும், கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டதை அடுத்து, நாட்டிலுள்ள அனைத்து வௌிநாட்டு தூதுக்குழு பிரதிநிதிகளுக்கும், மார்ச் மாதம் 27 ஆம் திகதி வௌிவிவகார அமைச்சு விசேட சுற்றுநிரூபமொன்றை அனுப்பியிருந்தது.
1962 ஆம் ஆண்டு நோய்த்தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரிகள் விடுக்கும்
ஆலோசனைகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாட்டின் இறைமைக்கு முன்னுரிமை வழங்குமாறு, குறித்த சுற்றுநிரூபத்தின் ஊடாக வௌிநாட்டு தூதுக்குழு பிரதிநிதிகளுக்கு, வௌிவிவகார அமைச்சு தௌிவாக அறிவித்திருந்தது.
இந்த கொள்கைக்கு அமைவாக நாட்டிற்கு வருகை தரும் அனைத்து வௌிநாட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இராஜதந்திர சிறப்புரிமை எவ்வாறாக இருந்த போதிலும், தற்போது காணப்படும் கொரோனா நிலைமைக்கு அமைய, அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில், PCR பரிசோதனைகளை நிராகரித்து அமெரிக்க தூதரக அதிகாரி, எவ்வாறான அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டிற்குள் அவ்வாறு பிரவேசித்தார்?
இராஜதந்திர தொடர்புகள் சம்பந்தமான வியன்னா பிரகடனத்திற்கு அமைய, தமது குழுவினர் செயற்படுவதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிடுகின்றது.
வியன்னா பிரகடனத்தின் 41 ஆவது சரத்தில், சேவையாற்றும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்தே, இராஜதந்திர அதிகாரிகள் தமது சிறப்புரிமையை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்யக்கூடாது எனவும் அந்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடொன்றின் சட்டத்தை பொருட்படுத்தாது, உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்யும் தூதுவர் அல்லது தூதரக அதிகாரி ஒருவரின் இராஜதந்திர தன்மையை இரத்து செய்து, நாட்டில் இருந்து வௌியெற்ற முடியும் என வியன்னா பிரகடனத்தின் 9 ஆவது சரத்தில் தௌிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் முக்கிய அரசியல் பேசு பொருளாக தற்போது மாறியுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ட்விட்டரில் தனது கருத்தை பதிவேற்றியுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR சோதனைகளை நிராகரித்தமை தொடர்பில் அதிருப்தியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியன்னா பிரகடனம் அமுலில் இருந்தாலும், உலகளாவிய ரீதியில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர் பாதுகாப்பு கருதி, மற்றுமொரு நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு அமைய செயற்படுவது அவசியம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பதிவிட்டுள்ள டுவிட்டர் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.