PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்த அமெரிக்க தூதரக அதிகாரி யார்?

by Staff Writer 04-06-2020 | 8:38 PM
Colombo (News 1st) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்​ PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார். இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் பரிசோதனையை மேற்கொள்ளாது அவர் அங்கிருந்து வௌியேற அனுமதிக்கப்பட்டதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் ரஜிவ் சூரியஆராச்சி நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR668 விமானத்தில் அமெரிக்க தூதரக அதிகாரி இன்று அதிகாலை 1.30 அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தார். இதன்போது அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் ரஜீவ சூரியஆரச்சி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்
PCR பரிசோதனைக்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டபோது சில மணித்தியாலங்களாக அவர் பரிசோதனையை நிராகரித்து தமது இராஜதந்திர அடையாளத்தை எமது அதிகாரிகளுக்கு காண்பித்துள்ளார். அதன் பின்னர் எமது அதிகாரிகள் இராஜதந்திர சேவையில் உள்ள ஒருவருக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்து கிடைத்த ஆலோசனைகள் மற்றும் அனுமதியின் பேரிலேயே அவர் நாட்டினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர அதிகாரிகளுக்கு இதன்போது சிறப்புரிமை கிடைக்கின்றது. குறிப்பாக அது சர்வதேச மட்டத்தில் உள்ள ஒரு விடயமாகும். தூதரகங்களில் உள்ள அதிகாரிகள் அதற்கான பொறுப்பை ஏற்று, அவரை தனிமைப்படுத்தி தேவையான PCR பரிசோதனையை நடத்தி வௌிவிவகார அமைச்சுக்கு அறிவித்து எமது அரசாங்கத்திற்கு தேவையான தகவல்களை வழங்குவார்கள் என நினைக்கின்றேன்
வௌிநாடுகளில் இருந்து வரும் எவராலும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் என அவர் கூறினார். குறித்த இராஜதந்திர அதிகாரி இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் விமான நிலைய அதிகாரிகளோ அல்லது வேறு தரப்பினரோ தமக்கு இதுவரை அறிவிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது மேலதிக தகவல்களை வௌிவிவகார செயலாளரிடம் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். எனினும், விமான நிலையத்திற்கு வருகை தந்த ஒருவர் அவ்வாறு நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் வௌிவிவகார செயலாளர் என்ற வகையில் தம்மால் பொறுப்புக்கூற முடியாது என வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார். தமது இராஜதந்திர பணியாளர்கள் இலங்கைக்கு வருகை தரும் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான வியன்னா சர்வதேச பிரகடனம், தரங்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. வியன்னா பிரகடனத்தின் 41 ஆவது சரத்திற்கு அமைய, இராஜதந்திர சிறப்புரிமை வழங்கப்பட்டிருந்தாலும் நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்க இராஜதந்திர அதிகாரிகள் கட்டுப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தமாரா குணநாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, விமான நிலையத்தில் PCR பரிசோதனை ஆரம்பிக்கப்பட்ட நாளில், இலங்கைக்கு வருகைதந்த முதலாவது பயணியான ஐரோப்பிய ஒன்றிய பெண் அதிகாரி எவ்வித முரண்பாடும் இன்றி PCR பரிசோதனையை எதிர்கொண்டார். தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் ஏற்கனவே வௌிவிவகார அமைச்சு இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு அறிவித்துள்ளதாக சீனாவின் 'ஒரே மண்டலம் ஒரே பாதை' திட்டத்தின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பரிசோதனை மூலம் வியன்னா பிரகடனத்திற்கு பாதிப்பு ஏற்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பின்புலத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் இலங்கையில் அந்த சட்டங்களை மதிக்காமைக்கு காரணம் என்னவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் அமெரிக்காவில் இவ்வாறு செயற்படுவதற்கான அனுமதி வழங்கப்படுமா எனவும் சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் வினவப்பட்டுள்ளது.