கொழும்பில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 

by Staff Writer 04-06-2020 | 9:06 AM
Colombo (News 1st) இன்று (04) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொழும்பு மாநகர சபை, சுகாதார திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியன ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன. இந்த நடவடிக்கையூடாக, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 19,000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் 2,722 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் சுமார் 2,200 பேர் டெங்கினால் பீடிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் பெய்த மழையின் பின்னர், டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.