படகில் தத்தளிக்கும் சமுத்திர பாதுகாப்பு தரப்பினர்

அரபிக்கடலில் படகில் தத்தளிக்கும் இலங்கை சமுத்திர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்

by Staff Writer 04-06-2020 | 9:21 PM
Colombo (News 1st) கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுமார் 70 இலங்கை சமுத்திர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அரபிக்கடலில் படகு ஒன்றில் சிக்கியுள்ளனர். தம்மை தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Grey Palm என்ற ஸ்பெய்ன் குழுமத்திற்கு சொந்தமான, 40 முதல் 50 பேருக்கு சேவை வழங்கக்கூடிய மத்திய தர மீனவர் படகு ஒன்றில் இவர்கள் சிக்கியுள்ளனர். இந்தப் படகில் 180 பேரை தடுத்து வைத்து ஆட்கடத்தல் இடம்பெறுவதாகக் கடந்த 2 ஆம் திகதி இவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். படகில் உள்ள சமுத்திர பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் அதிகமானவர்கள், ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களாவர். சர்வதேச கப்பல் அமைப்பின் நியமங்களுக்கு அமைய தடுத்து வைக்கும் போது, வழங்கப்படும் எவ்வித அடிப்படை வசதிகளும் தமக்கு வழங்கப்படவில்லை என இவர்கள் தெரிவித்துள்ளனர்.