வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்: ஜனாதிபதி பணிப்புரை

வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்: ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2020 | 8:08 pm

Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து வருகை தருவோரின் PCR பரிசோதனை அறிக்கைகளை விமான நிலையத்திலேயே பெற்று அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி இன்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

COVID-19 தொற்றுத் தடுப்பு செயலணி மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர், சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகம், முப்படைத் தளபதிகள், விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

வௌிநாடுகளில் இருந்து வருகை தருவோரை குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னதாக PCR பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கும் வரை தனியாக ஓரிடத்தில் வைப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னர், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகை தருவோர் PCR பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்கக்கூடிய வழிகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

PCR பரிசோதனை அறிக்கை கிடைப்பதை விரைவுபடுத்துவதற்காக விமான நிலைய வளாகத்தில் ஆய்வுக்கூடமொன்றை ஸ்தாபிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தவிர வௌிநாடுகளிலிருந்து வருகை தருவோரை அந்தந்த நாடுகளிலிலேயே PCR பரிசோதனைக்குட்படுத்தல், அது தொடர்பில் தலையீடு செய்வதற்கான இயலுமை குறித்து ஆராய்வதற்கும் இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், தனிமைப்படுத்தலின் போது ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்களை குறைத்துக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்