திருமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவிடமிருந்து மீள பெறப்படுமா? 

திருமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவிடமிருந்து மீள பெறப்படுமா? 

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2020 | 7:10 pm

Colombo (News 1st) இந்திய எண்ணெய் நிறுவனத்தின் கீழ் திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை மீண்டும் இலங்கை பொறுப்பேற்கும் முயற்சி தொடர்பில் கடந்த வாரம் தகவல்கள் வௌியாகின.

நாட்டின் மிகப் பெறுமதிவாய்ந்த வளமான இந்த எண்ணெய் குதங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது? அது எவ்வாறு இந்திய எண்ணெய் நிறுவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது?

உலகின் மிகவும் ஆழமான இயற்கை துறைமுகங்களில் ஒன்றான திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து இரண்டாம் உலகப் போரின்போது எண்ணெய் களஞ்சியப்படுத்தலுக்காக 102 குதங்களை பிரித்தானியர்கள் நிர்மாணித்தனர்.

தற்போது 99 எண்ணெய் குதங்கள் பயன்படுத்தக்கூடிய நிலையிலுள்ளன. எனினும், இதில் 15-ஐ மாத்திரம் இந்திய எண்ணெய் நிறுவனம் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது. ஆகவே, ஏனைய குதங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக, எண்ணெய் குதங்கள் தொடர்பில் முதற்தடவையாக இந்தியாவுடன் சட்டப்பிணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளக் கட்டியெழுப்புவது மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் என்பன இலங்கை – இந்திய கூட்டுத் திட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அந்த உடன்படிக்கையின் ஒரு இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்த போது, ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் மூலம் இந்த எண்ணெய் குதங்கள் அவர்களின் கீழ் கொண்டுவரப்பட்டன.

பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த எண்ணெய் குதங்களை மீண்டும் இலங்கை கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை.

2017 ஆம் ஆண்டு அப்போதைய பெட்ரோலிய அமைச்சர் சந்திம வீரக்கொடி 15 குதங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்தார்.

2018 ஆம் ஆண்டு துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த அர்ஜூன ரணதுங்கவும் கூட்டு செயற்பாட்டிற்கான பிரேரணையொன்றை அமைச்சரவையில் நிறைவேற்றிய போதிலும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட உடன்படிக்கை செல்லுபடியற்றுப்போனதால், அந்த எண்ணெய் குதங்களை கைப்பற்றுமாறு கோப் குழு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

2003 ஆம் ஆண்டு இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் அரசாங்கம் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய, எண்ணெய் குதங்கள் தொடர்பில் சட்ட ரீதியிலான கையளிப்பு ஆறு மாதங்களுக்குள் இடம்பெற வேண்டியுள்ள போதிலும் அது இடம்பெறவில்லை என கோப் குழு தெரிவித்துள்ளது.

எண்ணெய் குதங்கள் இந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டதன் மூலம் இலங்கை மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக பெட்ரோலிய தொழிற்சங்க ஒன்றியம் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றையும் தாக்கல் செய்தது.

இந்த பின்புலத்திலேயே எண்ணெய் குதங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தற்போதைய பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்சம் 25 குதங்களையேனும் மீளப்பெற்றுக்கொள்வதற்கான இயலுமை தொடர்பில் புதிதாக நியமனம் பெற்றுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் கலந்துரையாடுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டின் பெறுமதியான வளங்கள் வேறு தரப்பினர் வசமாவதை அனுமதிக்கலாமா?

இறைமையுள்ள நாடு என்ற ரீதியில் நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை, வௌிநாடுகளிடம் கையளித்துவிட்டு வேடிக்கை பார்ப்பது ஏற்புடையதா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்