ஜோர்ஜ் ஃப்ளொய்ட் கொலை: டெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றச்சாட்டு பதிவு

ஜோர்ஜ் ஃப்ளொய்ட் கொலை: டெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றச்சாட்டு பதிவு

ஜோர்ஜ் ஃப்ளொய்ட் கொலை: டெரிக் ஷாவின் மீது இரண்டாம் நிலை கொலைக்குற்றச்சாட்டு பதிவு

எழுத்தாளர் Bella Dalima

04 Jun, 2020 | 7:49 pm

 Colombo (News 1st) சட்டங்களை விட மக்களின் குரல் வலிமையானது என்பதை அமெரிக்க போராட்டம் எடுத்தியம்புகின்றது.

ஜோர்ஜ் ஃப்ளொய்டின் கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை வழங்குவதில் காணப்பட்ட அதிகாரமிக்கவர்களின் சறுக்கல் போக்கினை தற்போது மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஜோர்ஜ் ஃப்ளொய்டின் கழுத்தினை நெரித்துக் கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக மூன்றாம் கட்ட கொலைக் குற்றச்சாட்டே முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கொலை நோக்கம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் நோக்கமின்றி கவனயீனமாக செயற்பட்டதால் ஏற்படுகின்ற உயிரிழப்பையே இந்தக் குற்றச்சாட்டு குறிக்கின்றது.

நாளுக்கு நாள் வலுப்பெறும் ஆர்ப்பாட்டத்தினால், பிராந்திய சட்ட மா அதிபர் குற்றச்சாட்டினை திருத்தி புதிய குற்றச்சாட்டினை இன்று பதிவு செய்துள்ளார்.

அதன் பிரகாரம், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஏற்கனவே திட்டமிடாத வகையில் மனிதக்கொலை செய்த குற்றச்சாட்டு டெரிக் ஷாவின் (Derek Chauvin) மீது சுமத்தப்பட்டுள்ளது. ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மீது கொலைக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் ஃப்ளொய்ட் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்ததாக மருத்துவ அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டால், கொலைக்கு காரணமான பொலிஸ் அதிகாரியும் கொரோனா பரிசோதனையை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் மற்றுமொரு நெக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அநீதி மற்றும் அழுத்தத்திற்கு மத்தியில் நீதியைக் கோரி போராடும் பல ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஜோர்ஜ் ஃப்ளொய்டின் மகனும் இணைந்து கொண்டுள்ளார். தமது தந்தை கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்ற க்வின்சி மேசன் கவலையுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாளாகவும் அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி திடீரென ஏற்பட்ட கோபத்தினால் இந்த கொலையை செய்திருக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆர்ப்பாட்டக்காரர்களை தனது வார்த்தைகளால் உற்சாகப்படுத்தி வருகிறார்.

மக்களின் மனோநிலை தற்போது மாற்றமடைந்துள்ளது. மௌனமாக இருந்த அரசியல்வாதிகளினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. செய்தி அறிக்கையினூடாக அல்ல. எமது நாட்டு இளைஞர்கள் மாற்றத்தினை எதிர்பார்ப்பதினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

என பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தம், வர்க்கபேதங்களுக்கு எதிராக சுதந்திரத்தையும் மனிதநேயத்தினையும் கோருகின்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் இன்று உலகின் பல நாடுகளுக்கு வியாபிக்க ஆரம்பித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்