The Finance நிறுவனத்தில் வைப்பிலிட்டவர்களின் பணத்தை விரைவில் திருப்பி செலுத்துமாறு பிரதமர் ஆலோசனை

by Staff Writer 03-06-2020 | 8:40 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் கீழ் செயற்படும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சியை மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 'த பினான்ஸ்' (The Finance) நிறுவனத்தின் தற்போதையை நிலை தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்தல், அங்கு இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் அதிருப்தி அடைவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இதன் காரணமாக அரச நிதி நிறுவனங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் சீர்குலைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் புதிய சட்டங்களை உருவாக்கி, நிதி நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை ஒழிக்க செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'த பினான்ஸ்' நிறுவனத்தில் நிதி வைப்பிலிட்டவர்களுக்கான பணத்தை விரைவில் திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 97 வீதமானவர்களுக்கு நிதியை மீள செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எச்.ஏ. கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். ஏனைய 03 வீதமானவர்களின் நிதியை பின்னர் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.