நாட்டின் மொத்த கடன் தொகை எவ்வளவு: கணக்காய்வாளர் நாயகம் வௌிக்கொணர்வு

by Staff Writer 03-06-2020 | 8:25 PM
Colombo (News 1st) அரசாங்கத்தின் முழு கடன் தொகை தொடர்பில் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு தரவுகளுக்கு இடையே வேறுபாடு காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்தின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் வௌிக்கொணர்விற்கு அமைய இந்த வேறுபாடு 70,000 கோடி ரூபாவாகும். நிதி அமைச்சின் தரவுகளுக்கு அமைய 2019 ஆம் ஆண்டு இறுதியாகும் போது அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 12 இலட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாவாகும். எனினும், 70,000 கோடி ரூபா அரச கடன் அதில் உள்ளடக்கப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்படாத அரச கடன் தொகைக்குள் 31,820 கோடி ரூபாவிற்கான திறைசேரி முறிகள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பெறப்பட்ட கடன், மேலும் சில வௌிநாட்டு கடன்கள் அடங்குகின்றன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக பெறப்பட்ட 17,200 கோடி ரூபா கடன், 2019 ஆம் ஆண்டிற்கான நிதி அமைச்சு அறிக்கையில் அரச கடனில் இணைக்கப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 820 கோடி ரூபாவும் நிதி அமைச்சு அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. 2018, 2019 ஆம் ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட 3,340 கோடி ரூபாவும் நிதி அமைச்சு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.