நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்

அமெரிக்காவில் நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

by Bella Dalima 03-06-2020 | 4:28 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த George Floyd என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தனது காலால் அழுத்திய காட்சி வைரலானது. இதனையடுத்து அவர் உயிரிழந்தார். அவரின் மரணச்செய்தி கேட்டு பலர் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் பரவின. George Floyd மரணம் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தைக் கிளப்பியுள்ளது. இந்த போராட்டங்களை அடக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தும் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான விமர்சனங்களும் தற்போது வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்ரம்பை விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வெகுண்டு எழுந்துள்ள போராட்டங்களுக்கு மத்தியில் கடந்த 24 மணி நேரத்தில் 15, 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18, 27,206 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,06,028 ஆக அதிகரித்துள்ளது.