விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் விரைவில்

அடுத்த வாரம் முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

by Staff Writer 03-06-2020 | 9:01 PM
Colombo (News 1st) அடுத்த வாரம் முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில், நேற்று முன்தினம் (01) கூடிய டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 22 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்கள், தமது சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் 2,722 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் சுமார் 2,200 பேர் டெங்கினால் பீடிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 105 பேரும் மன்னார் மாவட்டத்தில் 119 பேரும் வவுனியா மாவட்டத்தில் 233 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 பேரும் டெங்கினால் பீடிக்கப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.