வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63 இலட்சமாகியது

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63 இலட்சத்தை கடந்தது

by Staff Writer 02-06-2020 | 2:27 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் Covid - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 இலட்சத்தை கடந்துள்ளது. எவ்வாறாயினும் 2,90,000 இற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸினால் முடக்கப்பட்டிருந்த பல நாடுகள் தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளன. சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைளில் இன்று (02) முதல் பல்வேறு தளர்வுகளை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு இன்று முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பொழுதுபோக்கு இடங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களாக புதிதாக வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கையானது நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளதாகவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகியுள்ளன. 10 வார இடைவெளிக்கு பின்னர் ஒரு வயது முதல் ஆறு வயது வரையிலான சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவில் குறைவடைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சிட்னியில் நேற்று முதல் நீச்சல் குளங்கள், சிகையலங்கார நிலையங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியன மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மெக்ஸிகோவில் நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. மலேசியாவில் தொடர்ந்து பத்தாவது நாளாக Covid - 19 தொற்றினால் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.