இராணுவத்தை நிலைநிறுத்தவுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்; இராணுவத்தை நிலைநிறுத்தவுள்ளதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்

by Staff Writer 02-06-2020 | 10:57 AM
Colombo (News 1st) அமெரிக்காவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரை அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். குறித்த போராட்டங்களை மாநிலங்கள் மற்றும் நகரங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், போராட்டக்காரர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இராணுவத்தினரை நிலைநிறுத்தவுள்ளதாக ட்ரம்ப் இதன்போது கூறியுள்ளார். கறுப்பின பிரஜையொருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7 நாட்களாக அமெரிக்காவின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வொஷிங்டன் டிசி, நிவ்யோர்க் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் வௌ்ளை மாளிகைக்கு அருகிலும் போராட்டத்தை முன்னெடுத்தமையால் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் கடந்த வாரம் நிலக்கீழ் அறையில் பதுங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வலுப்பெற்றுள்ள போராட்டங்களை தடுப்பதற்கு வீதிகள் தோறும் இராணுவத்தை நிறுத்தவுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிராந்தியங்களுக்கு பொறுப்பான தலைவர்கள் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு தவறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டங்களானது உள்நாட்டு பயங்கரவாதம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி விமர்சித்துள்ளார். சட்ட ஒழுங்குகளுக்கு தாமே ஜனாதிபதி எனவும் அமைதியான ஆர்ப்பாட்டங்களின் சகா எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் ஜோர்ஜ் ப்ளொய்ட் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு நீதி நிலைநாட்டப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸ் அதிகாரியினால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் அமெரிக்கக் கறுப்பினப் பிரஜை ஜோர்ஜ் ப்ளொய்ட் இன் மரணம், கொலை என பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரின் தாக்குதலினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருதயம் செயலிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி அடுத்த வாரம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதனிடையே, தமது சகோதரனின் கொலைக்கு நீதி கோரி போராட்டங்கள் நடத்தப்படுவதை விட, வேறேதுனும் மாற்று வழியில் நீதி கோர வேண்டும் என உயிரிழந்த கறுப்பின பிரஜையின் சகோதரர் கேட்டுக் கொண்டுள்ளார்.