by Staff Writer 02-06-2020 | 3:27 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்தும் பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் விசாரணையின்றி தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான புவனேக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதியும் விடுத்திருந்த வர்த்தமானிகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 8 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சட்டத்தரணி சரித்த குணரத்ன, ஐக்கிய மக்கள் சக்தி, ராவய பத்திரிகை ஆசிரியர் விக்டர் ஐவன், ஜாதிக்க ஹெலஉறுமய கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம உள்ளிட்டவர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
பொதுத்தேர்தலை ஜுன் 20 ஆம் திகதி நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்ததை அடுத்து, தேர்தல் திகதியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவொன்று மீளப்பெறப்பட்டது.
10 நாட்களாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக்க அளுவிகாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் அங்கம் வகித்த ஐயவரடங்கிய நீதியரசர்கள் குழாம் மனுக்களை பிரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.
மனுதாரர்கள், பிரதிவாதிகள் சார்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட வாதங்களை நீதியரசர்கள் கவனத்திற்கொண்டனர்.
15 இடையீட்டு மனுதாரர்களும் நீதிமன்றத்தில் தமது தரப்பு விடயங்களை முன்வைத்திருந்தனர்.
இவை அனைத்தையும் கவனத்திற்கொண்ட உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்வதற்கு தீர்மானித்ததாக இன்று பிற்பகல் அறிவித்தது.